Tag Archives: கவிதை

கண்மணியே…

காற்றோடு வந்த நறுமணமும்
சிறுவலையாக ஆடுமவள்
கூந்தலின் கருவண்ணமும்
கொண்டே கண்டு மகிழுமோ
என் மனமும்தான் ஓர்
மயவுலகில் ஆழ்கடலில்
ஓர் தருணம்?
பாலைவன மணலில்
நட்சத்திர வொளியில் தெரியுதவளது
பதிந்த பாதம் ஒவ்வொன்றும்
தடையங்கள் செல்லுமிடம் யாவும்
இருள் ஒன்றே சூழும் போலும்
எங்கேயடிச் சென்றா யென்கண்மணியே
உன்னையன்றி யென்பொய்
புன்னகையும் விம்மும் எந்நேரமும்!
இடைவிடாது துடிக்கும் இதயத்தின்
இடையே கசியுதடிவோர்
இனந்தெரியாத துன்பம்
குழலின் சோகத்திலுள்ள வோர் ஓலக்
குரல் அதை வருடவே எப்பொழுதும்!
என் நெடு மூச்சில் படும் உன் நினைவுகள்
கடுங்குளிரில் சுகமாக சுடுமனலாகும்!
பண்ணுள் மிகுந்த இசையது என்
கண்ணுள் வடியும் நீரைத்
தன்னோடுக் கரைத்து
தருமோவோர் அடைக்களம்
அதனலை கொண்டு
காற்றில் படர்ந்து
கருத்த இவ்வனத்தில்
கொண்டு சேர்க்குமோ
என்னை உன்னிடம்?
என் கண்மணியே…

Advertisements

இசை

நிழலுள் நிஜம் மூழ்கி
நிலவும் பொருள்யாவிலும்
சூழ்கிறது இருள்!
நல்நினைவெலாம் வெறுமாக
நஞ்சூட்டுஞ் சோகஞ்
சேர்க்கிறதோ என்னுள்?
இனந்தெரியாதக் குற்றவுணர்வு
இடைவிடாது யெனைச்சூழ
அனைத்தபடி ஆராரோப் பாடிய
அன்னையே ஆராரோயிருக்க
உன்னைத் தேடுதேயென் கண்கள் விழித்தபடி!
பல ஏமாற்றங்கள் என்மேற்
படையெடுக்கவே தெறிக்க
வோடவிருந்தேன் இசையைக் காணும் முன்னாள்!
கண்டேன் உன்னை அதனுள்
கண்டுகொண்டேன் அதன்மேல்
நான் கொண்ட காதலை.
மழலைச் சிட்டின் சின்னஞ் சிறுக்கைகள்
என்னை வருடியே அழைத்துச்
செல்கிறதோவோர் மாயவுலகிற்கு
இசையென்னு மோர்வடிவம் கொண்டு அதற்கு?
அதன்மொழிக் கொண்டு முத்தமிட்டு
ஆடிவருகுதே அருகிலே – அதனால்
கண்கள் சொருகி காணாச்சொர்க்கமதில்
தவழுதோ யென்மனம் குதூகலத்தில்?
இசையென்னு மிளங்கன்று
துள்ளித்திரிகிறிதே யெத்திசையிலும்
அக்கலை படரவே அசைந்தே
இசைகிறதேயென் தசையெலாம்!

இசை

விடிய விடிய மொட்டு விரியக்
காத்திருக்கும் வண்டு
வியந்துப் போற்றுந் தேன்போற்
கசிந்ததோ இசையென் உயிரில்?

பறந்துப் பறந்து பாலைவனப் பருந்து
களைத்தே திரும்பிக் கூட்டிற்பெரும்
இன்பமதை விருந்தாகத் தந்து
ஈரம் சேர்க்குமோ வாடிய என் மனதில்?

காணக் காணக் காணும் யாவும்
கானல் நீராகக் கண்களும் கலங்க
அழும் சோகங்களை அடையாளங்கண்டு
அமுதூட்டுமோ அஃதென் அகத்தில்?

இசையின் ஓசை
இவ்விதயத்தின் ஆசை
அசையும் பொருளெல்லாம்
அசைபோடும் அதனழகை!

எழிலைக் கொஞ்சும் ஐம்புலன்கள்

மொசார்ட்டோடு மோகங்கொண்டு
பீதோவனோடுப் பிணைந்து
இளையராஜாவின் இசையில் இதயங்கொண்ட
என் செவிகள் வேண்ட
முற்றின நிலா முத்தாகொளிர
வெண்மேகங்கள் விண்மீன்களைத் தீண்டவே
அதைக் கண்டுக்கொண் டென்கண்களும் வேண்டினவே,
மென்காற்றுப் படரச் சிலிர்த்தேயென்
மேனி சிரித்துக் கேட்டனவே – அவ்விரவில்
விரியும் மொட்டோடு வரும் வாச முணரும்மூக்கோடு,
முத்தமிழை முத்தமிட்டு நாவில் சுவைக்க
கலைநயமிக்க வோர்ப்பாடல் வரைந்திடவே!